நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 7:58 AM IST (Updated: 1 May 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்கு ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நமது மாவட்டத்துக்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 46 பணிகள் மேற்கொள்ள ரூ.16 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 23 ஆயிரத்து 120 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிகளும் அந்த பகுதி விவசாயிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும். நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை சரிசெய்து விட்டு மற்ற பணிகளை தொடங்க வேண்டும்.

விவசாய குழுக்கள்

விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும். முதல்கட்டமாக விவசாய குழுக்களிடம் வங்கி கணக்கு மற்றும் குழு அமைப்பது தொடர்பான அனைத்து பணிகளும் விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கி, அனைவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே (நெல்லை), பிரதீப் தயாள் (சேரன்மாதேவி), உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story