தடையை மீறி குற்றாலம் ஐந்தருவியில் குளித்தவர்களால் பரபரப்பு
ஊரடங்கு தடையை மீறி குற்றாலம் ஐந்தருவியில் குளித்தவர்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில் சீசன் இருக்கும். கடந்த சில காலங்களில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியுள்ளது. தற்போது குற்றாலத்தில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. இருப்பினும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கோடை மழையால் மெயின் அருவியில் தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியிலும் 2 கிளைகளில் தண்ணீர் விழுந்தது. நேற்று நீர்வரத்து குறைவாக காணப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
குளித்தவர்களால் பரபரப்பு
இந்த நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் நேற்று ஒரு குடும்பத்தினர் ஆனந்தமாக குளித்தனர். இதனை படமெடுக்க கேமராவை எடுத்ததும் ஒரு பெண்ணைத்தவிர மற்றவர்கள் அருவியில் இருந்து வெளியே வந்துவிட்டனர். ஊர் முழுவதும் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் சூழலில் இந்த குடும்பத்தினர் மட்டும் அருவியில் குளித்தனர்.
இதுபோல பலரும் குளிக்க வந்தால் அங்கே நோய் தொற்று பரவ வாய்ப்பு ஏற்படும். அருவிக்கரை பாதை கயிறு கட்டி மூடப்பட்டு இருந்தாலும், அதன் ஓரமாக இவர்கள் உள்ளே சென்று குளித்துள்ளனர். ஊரடங்கு தடையை மீறி குற்றாலம் ஐந்தருவியில் குளித்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story