திருப்பூரில் மே தின விழா - அவினாசி பகுதிகளில் வீடுகளில் கொடியேற்றப்பட்டது
திருப்பூரில் மே தின விழா கொண்டாடப்பட்டது. அவினாசி பகுதிகளில் வீடுகளில் கொடியேற்றப்பட்டது.
திருப்பூர்,
தொழிலாளர்கள் அதிகமான திருப்பூரில் ஆண்டுதோறும் தொழிலாளர்கள் தினமான மே தினம் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போன்றவையும் நடைபெறும். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் பலர் தங்களது பகுதிகளிலேயே மே தின கொடியேற்றினார்கள்.அதன்படி திருப்பூர் தோட்டத்துப்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மே தின கொடியேற்றினர். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
திருப்பூர் பி.என்.ரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. பனியன் பேக்டரி லேபர் யூனியன் அலுவலகத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் தலைமையில் மே தின விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் சுப்பராயன் எம்.பி. கொடியேற்றி வைத்தார். பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முழு சம்பளத்தை வழங்க வேண்டும். நோய் தொற்றை காரணம் காட்டி தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்பராயன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். சமூக இடைவெளி விட்டு முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதுபோல் எம்.எல்.எப். சார்பில் மே தின விழா சங்க அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பனியன் சங்க செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். சமுக இடைவெளி விட்டு ம.தி.மு.க.வினர், எம்.எல்.எப். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மே தினத்தை முன்னிட்டு சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் முன்பாக கொடி ஏற்றுமாறு அறைகூவல் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவினாசி, அவினாசிலிங்கம்பாளையம், கருவலூர், புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வீடுகளில் குடும்பத்துடன் கொடியேற்றி மே தின விழா கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து அவினாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகம், ஆட்டையம்பாளையம், வடுகபாளையம், அவினாசிலிங்கம்பாளையம், ஆட்டையாம்பாளையம், கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், துலுக்க முத்தூர் உள்ளிட்ட தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ள இடங்களில் கொடி ஏற்றி மேதினம் கொண்டாடப்பட்டது.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.முத்துச்சாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.வெங்கடாசலம், ஆர்.பழனிச்சாமி, ஏ.சண்முகம், சி.ஐ.டி.யு. கட்டிட கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, கனகராஜ் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பி.பழனிச்சாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story