பருத்திக்கு விலை இல்லை; கவலையில் விவசாயிகள்


பருத்திக்கு விலை இல்லை; கவலையில் விவசாயிகள்
x
தினத்தந்தி 1 May 2020 10:45 PM GMT (Updated: 1 May 2020 9:47 PM GMT)

ஊரடங்கினால் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம், 

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அமலில் உள்ள ஊரடங்கினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை சந்தைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால் நெல் விவசாயமும், அதனை தொடர்ந்து பருத்தி, மிளகாய் விவசாயமும் நன்றாக இருந்தது. இந்த ஆண்டு பருத்தி நன்றாக மகசூல் கொடுத்தாலும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பருத்தி விவசாயி வான்தமிழ் இளம்பரிதி கூறியதாவது:- எனது நிலத்தில் இயற்கை விவசாயம் முறையில் நெல், பருத்தி, மிளகாய் விவசாயம் செய்துள்ளேன். மாப்பிள்ளை சம்பா நெல் ரகம் விளைந்த நிலையில் அதனை அரிசியாக்கி சென்னைக்கு அனுப்ப முயற்சி செய்தேன். அதுவும் தடை உத்தரவால் அனுப்ப முடியாமல் தேங்கி உள்ளது. பருத்தி நன்றாக விளைந்தும், ஊரடங்கை பயன்படுத்தி வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு கிலோ ரூ.55 வரை விலை போன பருத்தி இந்த ஆண்டு ரூ.33 முதல் ரூ.35 வரை விலைபோகிறது. இது வேலையாட்களுக்கு கொடுக்கும் பணத்தை விட மிகக்குறைவாக உள்ளது. இதனால் பருத்தி விளைந்தும் விலை கிடைக்காமல் போய்விட்டது. இதன்காரணமாக பருத்தியை பறிக்காமல் ஏராளமானோர் அப்படியே விட்டு விட்டனர். 

இன்னும் சிலர் பருத்தியை பறித்து வீட்டில் வைத்துள்ளனர். தற்போதைய நிலையில் வேறு வருமானம் இல்லாததால் அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எங்களின் நிலையை போக்க அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story