திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா - துணிக்கடை வியாபாரி குணமடைந்து வீடு திரும்பினார்


திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா - துணிக்கடை வியாபாரி குணமடைந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 2 May 2020 4:30 AM IST (Updated: 2 May 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை சுற்றியுள்ள பெரிய எடப்பாளையம், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பெரிய எடப்பாளையத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து பெரிய எடப்பாளையத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல திருவள்ளூர் அடுத்த நேமம், கூடப்பாக்கம் போன்ற பகுதிகளில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வியாபாரி குணம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிய எடப்பாளையம், நேமம், கூடப்பாக்கம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க துணிக்கடை வியாபாரி ஒருவர் கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து துணிக்கடை உரிமையாளர் தற்போது குணம் அடைந்து விட்ட காரணத்தால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில்...

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை முடிந்து நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார். அவருக்கு ஆரம்பாக்கம் பகுதியில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை சார்பாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண்ணிற்கு புத்தகமும் போலீசார் சார்பாக இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கும்மி டிப்பூண்டி தாலுகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருப்பதால், தற்போது கும்மிடிப்பூண்டி தாலுகா கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறி உள்ளது.

Next Story