வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஊரடங்கு: வியாபாரிகளாக மாறிய போட்டோ, வீடியோ கலைஞர்கள்


வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஊரடங்கு: வியாபாரிகளாக மாறிய போட்டோ, வீடியோ கலைஞர்கள்
x
தினத்தந்தி 1 May 2020 10:24 PM GMT (Updated: 1 May 2020 10:24 PM GMT)

ஊரடங்கு உத்தரவு போட்டோ, வீடியோ கலைஞர்களின் வாழ்க்கையை ஊரடங்கு புரட்டி போட்டு உள்ளது. வருமானம் இல்லாததால் இவர்கள் வியாபாரிகளாக மாறி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

ஊரடங்கு உத்தரவு போட்டோ, வீடியோ கலைஞர்களின் வாழ்க்கையை ஊரடங்கு புரட்டி போட்டு உள்ளது. வருமானம் இல்லாததால் இவர்கள் வியாபாரிகளாக மாறி வருகிறார்கள்.

புரட்டிப்போட்ட ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கை புரட்டி போடப்பட்டு உள்ளது. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது போட்டோ, வீடியோ கலைஞர்கள் தான். இவர்களுக்கு ஆண்டுக்கு 6 மாதம் தான் தொழில் இருக்கும். அதில் சம்பாதிப்பதை வைத்து மீதி 6 மாதத்தை ஓட்டுவது வழக்கம். இவர்களுக்கு குறிப்பாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆவணி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் அதிக அளவில் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குறைவானவர்கள் பங்கேற்கும் வகையிலேயே நடத்தப்பட்டது. உற்றார், உறவினர்களுடன் விமரிசையாக நடத்த விரும்பியவர்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். இதேபோல் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடைபெறும் மாநாடு, கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களின் பணி தான் அதிகமாக இருக்கும். நிகழ்ச்சி தொடங்குவதில் இருந்து முடிவது வரை இவர்கள் தான் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

காரணம், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகளுக்கு புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களை பதிவு செய்து இருந்தவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிகழ்ச்சிகள் வரை பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகளாக மாறினர்

கடந்த 38 நாட்களாக இவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். சிலர் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

சிலர் தங்கள் வீடுகளிலேயே போளி உள்ளிட்ட பலகாரங்களை தயார் செய்து சைக்கிளில் சென்று விற்பனை செய்து வருகிறார்கள். அதில் போதிய வருமானம் கிடைக்காவிட்டாலும் குடும்பம் நடத்துவதற்காக ஓரளவு வியாபாரம் நடப்பதால் சிரமப்பட்டு அதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

செல்போன்

இன்று பெரும்பாலான விலைஉயர்ந்த செல்போன்களில் கேமரா உள்ளதால் அவர்களே தங்கள் நிகழ்ச்சிகளை புகைப்படம், வீடியோ எடுத்துக்கொள்கிறார்கள். ஏற்கனவே இதன் மூலம் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு எங்கள் வாழ்வை அதள, பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டது என்று இவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட போட்டோ, வீடியோ மற்றும் எடிட்டிங் கலைஞர்கள் முன்னேற்ற நல சங்க செயலாளர் விஜயபாலன் கூறுகையில், “ஊரடங்கால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஊரடங்கு முடிந்த பிறகாவது எங்கள் தொழில் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆவணி மாதம் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்து இருந்தவர்களும் தற்போது அதனை ரத்து செய்து வருகிறார்கள். பொதுமக்களும் வருமானம் இழந்து வருவதால் அதனை ஈடுகட்டி சகஜ நிலைக்கு வந்தாலும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அடுத்த ஆண்டு(2021) ஜனவரி மாதத்தில் தான் நடைபெறும். அதுவரை எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான்.

நிவாரணம்

அரசு நிர்வாகம் செயல்படத்தொடங்கி பல்வேறு போட்டித்தேர்வுகள், ஆட்கள் நியமனம் நடப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்கு பாஸ்பார்ட் புகைப்படம் எடுக்க வருவதற்கு கூட மாதக்கணக்கில் ஆகும். அதுவரை நாங்கள் என்ன செய்வது? என்று தெரிய வில்லை.

கடை வாடகை கட்ட வேண்டும். கடன் மூலம் வாங்கிய கேமராவுக்கு தவணை தொகை கட்ட வேண்டும். என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. வருமானம் இல்லாததால் தற்போது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறோம். அமைப்புசாரா தொழிலாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளோம். ஆகையால் எங்களுக்கும் நிவாரண நிதி வழங்க உரிய ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

Next Story