திருவொற்றியூரில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்


திருவொற்றியூரில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 2 May 2020 4:32 AM IST (Updated: 2 May 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரே போலீஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து உதவி செய்தார். அவரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவர், நேற்று முன்தினம் மாலை திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். 

அவருடன் தலைமை காவலர் மனுவேலும் இருந்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிலர் பரபரப்பாக ஓடி வந்தனர். இதைபார்த்த இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனது வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் என்ன பிரச்சினை? என கேட்டார்.

அதற்கு அவர்கள், உதயசூரியன் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருடைய மனைவி கலைவாணி (வயது 21) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவ வலியால் துடிக்கிறார். நாங்கள் போன் செய்தும் 108 ஆம்புலன்ஸ் இன்னும் வரவில்லை. ஊரடங்கு உத்தரவால் வேறு எந்த வாகனங்களும் கிடைக்கவில்லை. எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உடனடியாக போலீஸ் வாகனத்தை அவர் வீட்டின் அருகில் கொண்டு சென்று நிறுத்தினார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்ற பார்த்த போது கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்து கொண்டு இருப்பதை நேரில் பார்த்தார்.

இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறக்கலாம் என்ற சூழல் இருந்ததால் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியே, அந்த கர்ப்பிணி பெண்ணை கைத்தாங்கலாக அழைத்து வந்து தனது போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் இன்ஸ்பெக்டர் உதவி செய்ததால் அந்த பெண் மற்றும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் உதவி செய்த பெண் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை போலீஸ் உயர் அதிகாரிகளும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடுமையான பணிச்சுமை நேரத்திலும் மனிதநேயத்தோடு உதவிய பெண் இன்ஸ்பெக்டரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்தது.

Next Story