கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 14 பேருக்கு கொரோனா இல்லை கலெக்டர் தகவல்


கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 14 பேருக்கு கொரோனா இல்லை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 May 2020 11:15 PM GMT (Updated: 1 May 2020 11:15 PM GMT)

கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானதை தொடர்ந்து, சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 14 பேருக்கு கொரோனா இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.நகர் பகுதியில் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர், 3 சுகாதார மேற்பார்வையாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 20 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், 40 நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 4 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடு, வீடாக சென்று வீட்டை சுற்றி தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடுகள் உள்பட உபயோகமற்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மேற்கண்ட பொருட்களை அப்புறப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். மற்றொரு குழு மூலம் குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, பிறகு குடிநீருக்கு முறையான குளோரினேசன் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை தேவையில்லாமல் சேமித்து வைக்க வேண்டாம். குடிநீரை காற்று புகாத வகையில் மூடி வைப்பதோடு, நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.

மருத்துவ முகாம்கள்

மற்றொரு குழு மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக குடியிருப்புகளின் உட்புறமும், வெளிபுறமும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. 12 கிராம சுகாதார செவிலியர்கள், 22 சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பவர்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறிகள் தென்பட்டால், அங்கே செயல்படும் 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடலூர் அரசு மருத்துவமனை, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். பொதுமக்கள் தன்னிச்சையாக மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். அப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மருத்துவர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் அடங்கிய 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 15 நாட்கள் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story