நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது


நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 2 May 2020 4:52 AM IST (Updated: 2 May 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. மேலும் ஊட்டி திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏ.டி.சி. பகுதியில் உள்ள திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.

குன்னூரில் நேற்று மாலை பெய்த பலத்த மழையில் கரன்சி-டால்பின் நோஸ் சாலையில் 3 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதேபோன்று மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கடும் வெயில் காணப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென கோடை மழை பெய்தது. மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கீழ்குந்தா, கரியமலை, குந்தா பாலம், எடக்காடு, காந்திதி கண்டி, தங்காடு, கன்னேரி, மணியட்டி, பாலகொலா, எமரால்டு ஆகிய பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து, பயிர்கள் நல்ல முறையில் வளர ஏதுவானது. மேலும் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதல் குறைவதுடன், வெளிர் நிறத்தில் கிடக்கும் தேயிலை இலைகள் பச்சை பசேல் என மாறி மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

மின்தடை

இது தவிர பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, எருமாடு, தாளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகி றது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த காற்றும் வீசியது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அப்போது தாளூர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார், வனத்துறையினர் கடும் அவதி அடைந்தனர். தாளூரில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பிதிர்காடு, ஏலமன்னா, நெலாக்கோட்டை, அத்திக்குன்னா உள்ளிட்ட இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஏலமன்னா, அத்திக்குன்னு கே.கே. நகர் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு, பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் நேற்று மாலை மின் வினியோகம் சீரானது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால், குளுகுளு காலநிலை நிலவுகிறது.

Next Story