கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - முதல்-மந்திரிக்கு எச்.கே.பட்டீல் கடிதம்
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக விலகலை உறுதி செய்ய இந்த ஊரடங்கு அவசியமானது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற முழக்கம் மக்களின் வாழ்க்கையில் ஒரு பாகமாக மாறிவிட்டது.
சிறு சிறு சம்பவங்களை தவிர்த்து நாடு முழுவதும் மக்கள் இந்த ஊரடங்கை தீவிரமாக பின்பற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ்சால், இந்த உலகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். உலக பொருளாதாரம் முடங்கிவிட்டது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மதுபானம் குடித்தவர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஒரு சில நன்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தில் கணவன்-மனைவி, குழந்தைகள், பெற்றோர் கூடி இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் அன்பு, கருணை, அனுதாபம், தியாகம் போன்ற நமது வாழ்க்கையின் மாண்புகளை பின்பற்றுகிறார்கள். மதுபானம் குடித்தவர்கள், தற்போது அவை இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேல் வாழ்க்கையை நடத்திவிட்டனர்.
கள்ளச்சாராயம் குடிப்பவர்களும் குடிப்பதை நிறுத்திவிட்டனர். மதுபானம் இல்லாத வாழ்க்கையை நோக்கி மக்கள் நடைபோடுகிறார்கள். மதுபானம் இல்லாததால், சண்டைகள், அதிகார துஷ்பிரயோகம், அமைதியற்ற நிலை போன்றவை குறைந்துள்ளது. மதுபானத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியபோதெல்லாம், சிலர் இது சாத்தியமில்லை என்று கூறினர்.
மதுவிலக்கு அமல்
இந்த மதுபானம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தற்காலிக நிவாரணம் கொடுத்தாலும் அதனால் வறுமை தான் அதிகரிக்கிறது. மதுபானம் குடிப்பதால், வீடுகளில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை அதிகமாக நடக்கிறது. மதுபானம் குடும்பங்களை சீரழிக்கிறது. தற்போது மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளதால், குடும்ப பிரச்சினைகள் குறைந்துள்ளன.
பெண்கள் பாதிக்கப்படுவதும் குறைந்துள்ளது. தினமும் நரக வேதனையை அனுபவித்து வந்த பெண்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். மதுபானத்தை தடை செய்வது என்பது கடினமானது. இப்போது இயற்கையே மதுபானத்தை தடுத்துள்ளது. இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இந்த புரட்சிகரமான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். மதுபானத்திற்கு தடை விதிக்க இதைவிட சரியான நேரம் வேறு இருக்காது என்பதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு எச்.கே.பட்டீல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story