கர்நாடகத்தில் ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம் - சித்தராமையா பேட்டி
“கர்நாடகத்தில் ஊரடங்கு நீடித்தால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்” என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்றால் ஊரடங்கை தளர்த்த வேண்டியது அவசியம். ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவு எடுக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்காவிட்டால் அடுத்து வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்.
ஆனால் கொரோனா அதிகம் பாதித்துள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தக்கூடாது. ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்களில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஏழைகளுக்கு வாங்கும் சக்தி இல்லை. அவர்களுக்கு வாங்கும் சக்தியை ஏற்படுத்த வேண்டுமென்றால், ஏழை மக்களுக்காக ஒரு உதவி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சமூக அடிப்படையில் தொழில் செய்கிறவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் கிடைக்க வேண்டும். அப்போது தான் சந்தைகளில் வாங்கும் நடவடிக்கைகள் சரியான முறையில் நடை பெறும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். ஊரடங்கை மேலும் நீட்டித்தால் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் தீவிரம் அடையும். மேலும் மக்கள் பசியால் வாடும் நிலையும் உண்டாகும்.
மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பசியால் வாடும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்காமல் இருந்திருந்தால், சமுதாயத்தில் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். மக்கள் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். அதனால் கர்நாடக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் வருகிற 3-ந் தேதிக்கு (அதாவது நாளை) பிறகு ஊரடங்கை தளர்த்த வேண்டும்.
வசதிகளை நிறுத்த வேண்டும்
கர்நாடக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தேவையற்ற செலவுகளுக்கு இந்த அரசு கடிவாளம் போடவில்லை. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வாரியம்-கழகங்களில் தேவையற்ற செலவுகளை தடுக்க வேண்டும். அந்த அமைப்புகளில் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், வசதிகளை நிறுத்த வேண்டும்.
மிக அவசியமான பணிகளுக்கு மட்டுமே அரசு செலவு செய்ய வேண்டும். இதுபற்றி முதல்-மந்திரி சிந்தித்து செயல்படுவது இல்லை. அதிகாரிகள் எழுதி கொடுப்பதை மட்டும் அவர் வாசிக்கிறார்.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story