வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு திரும்ப விரும்புபவர்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்க இணையதள வசதி


வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு திரும்ப விரும்புபவர்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்க இணையதள வசதி
x
தினத்தந்தி 2 May 2020 5:59 AM IST (Updated: 2 May 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்ப விரும்புபவர்கள் அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக இணையதள வசதியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பவர்களை, அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்தநிலையில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்களை, இங்கு அழைத்து வரவும், புதுவையில் தவிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசு பிரத்தியேகமாக http://we-l-c-o-m-e-b-a-ck.py.gov.in என்ற தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

பதிவு செய்யவேண்டும்

இந்த இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் கேபினட் அறையில் நேற்று நடந்தது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் புதுவைக்கு வர விருப்பப்பட்டால், இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களை அழைத்து வர புதுவை அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கும். இதன் சிறப்பு அதிகாரியாக அரசு செயலாளர் பூர்வா கார்க் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Next Story