மீன் சாப்பிட்டு ரொம்பா நாளாச்சு...கொஞ்சம் வாங்கி கொடுங்கைய்யா... மூதாட்டியின் ஆசையை பூர்த்தி செய்த போலீஸ் அதிகாரி
மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என கேட்ட மூதாட்டியின் ஆசையை போலீசார் அதிகாரி ஒருவர் நிறைவேற்றினார்.
குளச்சல்,
மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என கேட்ட மூதாட்டியின் ஆசையை போலீசார் அதிகாரி ஒருவர் நிறைவேற்றினார்.
ஊரடங்கு
குமரி மாவட்ட மக்கள் மீன் உணவை விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் ஏதாவது ஒருவகை மீனை குழம்பாகவோ, பொரிப்பாகவோ வீட்டில் கம,கமக்கும் வகையில் சமையல் இருக்கும். ஆனால், கொரோனா ஊரடங்கு குமரி மாவட்ட மக்களின் ஆசையையும் புரட்டி போட்டது. அதாவது, ஊரடங்கால் விசைப்படகு மீனவர்கள், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் மீன்கள் வரத்து இல்லாததால், மீன் உணவு சாப்பிட முடியாமல் மக்கள் பரிதவித்தனர். நீண்ட நாட்களாக மீன் சாப்பிடாததால், குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் சாப்பிட்ட திருப்தி இல்லை. மேலும் நாக்கு, மீனின் சுவைக்கு ஏங்கியது. அதிலும், 60 வருடங்களாக தினமும் மீன் சாப்பிட்ட முதியவர்களின் மனநிலை எப்படி இருக்கும், என கொஞ்சம் நினைத்து பாருங்க... அந்த மாதிரி ஏராளமானோர் பரிதவித்தனர். அந்த வகையில் ஊரடங்கால் மீன் சாப்பிடாமல் பரிதவித்த மூதாட்டி ஒருவரின் ஆசையை போலீஸ் அதிகாரி ஒருவர் நிறைவேற்றிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
போலீஸ் அதிகாரி
குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி. இவர் தற்போது கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயத்தில் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களுக்கு போலீஸ் சார்பில் காய்கறிகள், அரிசியையும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார்.
இதற்கிடையே சமீபத்தில், குளச்சல் சி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள முதியவர்கள் உள்பட பலருக்கு காய்கறிகள், அரிசி போன்றவற்றை வழங்கினார். இந்த நிலையில் விஸ்வேஸ் சாஸ்திரி நேற்று அந்த பகுதியில் மீண்டும் ரோந்து பணியாக சென்றார். அப்போது, வீட்டு திண்ணையில் சோகமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியை பார்த்தார்.
மூதாட்டியை ஆசையை நிறைவேற்றினார்
உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அவர், என்ன பாட்டி, சோகமாக இருக்கீங்க, ஏதாவது வேணுமா? என அக்கறையோடு நலம் விசாரித்தார். அய்யா, போன வாரம் வந்தீங்க, அரிசி, காய்கறிகளெல்லாம் கொடுத்தீங்க, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஆனால், ஊரடங்கால் மீன் சாப்பிட்டு ரெம்ப நாளாச்சு, இப்போது தான் மீன் பிடிக்க அனுமதி கொடுத்தாச்சுலா, கொஞ்சம் மீன் வாங்கி கொடுங்களேன் என்று தனது ஆசையை அவரிடம் அப்பாவித்தனமாக வெளிப்படுத்தினார். மூதாட்டியின் நிலைமையை புரிந்து கொண்ட அவர், உடனே மீன் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோர் துறைமுகத்துக்கு சென்று மீன் வாங்கி வந்து மூதாட்டிக்கு கொடுத்தனர். அவரும், மீன் உணவை சாப்பிட்டு ருசித்து மகிழ்ந்தார். ஆதரவற்ற மூதாட்டியின் மீன் சாப்பிடும் ஆசையை போலீஸ் அதிகாரி நிறைவேற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story