தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீன்கள் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இலவசமாக வினியோகம்
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலவசமாக மீன்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலவசமாக மீன்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட பகுதி
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நோய் தொற்றால் குமரியில் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது நாகர்கோவிலில் உள்ள டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை மற்றும் மணிக்கட்டிபொட்டல், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
எனவே அந்த பகுதியில் மேலும் நோய் பரவாமல் இருக்க அங்கு தடுப்பு வேலிகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
மீன், காய்கறிகள் வினியோகம்
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியே செல்லவும், வெளி நபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை பகுதியில் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று டென்னிசன் தெருவில் வசிப்பவர்களுக்கு மீன் மற்றும் காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் வெள்ளாடிச்சிவிளை பகுதிகளில் காய்கறிகள் வழங்கப்பட்டன.
அத்தியாவசிய உணவு பொருட்கள்
மேலும் இதேபோல் தினமும் அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, காய்கறி, முட்டை இலவசமாக வழங்கப்படும். இருப்பினும் பணம் கொடுத்து வாங்க விரும்புவோரும் அதற்கான தொகையை கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளலாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story