கடலூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை


கடலூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 2 May 2020 9:04 AM IST (Updated: 2 May 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய அரசு அனுமதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள ஆய்வகத்தில் புதுச்சேரியின் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர்த்து தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களுக்கான வழிகாட்டல் நிறுவனமாக ஜிப்மர் விளங்கி வருகிறது. ஜிப்மர் ஆய்வகத்தில் இதுவரை 3 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

3 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ? என்ற சந்தேகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ஜிப்மரில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் அவர் சென்னை சென்று வந்தது தெரியவந்தது. அவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மூதாட்டியின் உறவினர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் ஜிப்மரில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story