திருபுவனை பகுதியில் கரும்பு வெட்டும் பணி மும்முரம்


திருபுவனை பகுதியில் கரும்பு வெட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 2 May 2020 3:38 AM GMT (Updated: 2 May 2020 3:38 AM GMT)

திருபுவனை பகுதியில் ஊரடங்குக்கு மத்தியிலும் கரும்பு வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருபுவனை,

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. புதுவையிலும் இந்த உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த 20-ந் தேதி முதல் விவசாயம், கட்டுமான பணிகள் நடைபெற அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து திருபுவனை, திருக்கனூர், பாகூர் பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

திருபுவனை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது. இதன் அறுவடை பணிகள் ஊரடங்குக்கு மத்தியிலும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல நாட்களாக வேலையின்றி தவித்த கூலி தொழிலாளர்கள், தற்போது வேலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவை பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகள் இயங்காததால், இங்கு வெட்டப்பட்ட கரும்புகள் டிராக்டர்கள் மூலம் கடலூர் பகுதியில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஒரு டன் கரும்பு ரூ.2 ஆயிரத்து 650-க்கு விலை போகிறது. இதில் குருத்து, சோலை கழிவுகள் 10 சதவீதம் வரை கழித்து போக மீதி தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

சர்க்கரை ஆலைகளை திறக்கவேண்டும்

திருபுவனை பகுதியில் வெட்டிய கரும்புகளை அரவைக்காக நீண்ட தூரம் கொண்டு செல்வதால், வாடகை அதிகம் கொடுக்கவேண்டி இருக்கிறது. இதனால் போதிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் புதுவையில் உள்ள சர்க்கரை ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story