சென்னையில் இருந்து வந்தவர்: கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா


சென்னையில் இருந்து வந்தவர்: கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 May 2020 10:10 AM IST (Updated: 2 May 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கரூர், 

சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ஆம்புலன்ஸ் உதவியாளர்

கரூர் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 42 பேரும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியதையடுத்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியது.

இந்தநிலையில், கரூர் அருகே உள்ள கடம்பங்குறிச்சி பகுதிக்குட்பட்ட சின்னவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், சென்னை ராயபுரம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 25-ந்தேதி உறவினர் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் கரூர் வந்துள்ளார். துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரால், ஊரடங்கு காரணமாக மீண்டும் சென்னைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அலுவலகத்தின் உத்தரவின் பேரில், கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் 108 ஆம்புலன்சில் கடந்த 27-ந்தேதி காலை முதல் 28-ந்தேதி காலை வரை பணி செய்துள்ளார்.

தனிவார்டில் அனுமதி

இதற்கிடையே சென்னையில் இவருடன், பணிபுரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், கரூரில் இருந்த ஆம்புலன்சு உதவியாளருக்கும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் உதவியாளரின் பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சின்னவரப்பாளையத்தில் ஆம்புலன்ஸ் உதவியாளர் வசித்து வந்த தெரு சீல் வைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் உதவியாளர் பணியின்போது, காணியாளம்பட்டி, கோடங்கிபட்டி, சுங்ககேட், டி.கூடலூர் பகுதிகளில் இருந்து நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story