பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் குணமடைந்தனர் சிவப்பு மண்டலத்துக்குள் இடம்பெற வாய்ப்பு


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் குணமடைந்தனர் சிவப்பு மண்டலத்துக்குள் இடம்பெற வாய்ப்பு
x
தினத்தந்தி 2 May 2020 11:50 AM IST (Updated: 2 May 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஊரடங்கு மீறப்படுவதால் பெரம்பலூர் சிவப்பு மண்டலத்துக்குள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மொத்தம் 9 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தீயணைப்பு வீரர், கல்லூரி மாணவர், நிறைமாத கர்ப்பிணி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர், 59 வயதுடைய பெண் உள்பட மொத்தம் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வி.களத்தூரை சேர்ந்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி இருந்தார். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் பாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், வி.களத்தூர் போலீஸ் நிலைய ஏட்டு, வி.களத்தூரை சேர்ந்த மற்றொரு நபர் என மொத்தம் 3 பேர் குணமடைந்ததால், அவர்கள் நேற்று மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி தங்களது வீடுகளுக்கு திரும்பி தனிமையில் உள்ளனர்.

ஆரஞ்சு மண்டலம்

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 253 பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பெரம்பலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் தமிழக வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்காததாலும், சமூக இடைவெளியை பொதுமக்கள் சரியாக பின்பற்றாததாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சிவப்பு மண்டலத்துக்குள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சாலையில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். எனவே மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி, கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story