பழமையை மீட்டெடுத்த கொரோனா


பழமையை மீட்டெடுத்த கொரோனா
x
தினத்தந்தி 2 May 2020 6:41 AM GMT (Updated: 2020-05-02T12:11:36+05:30)

கொரோனா வைரஸ் பழமையை மீட்டெடுத்துள்ளது.

வி.கைகாட்டி, 

கொரோனா வைரஸ் பழமையை மீட்டெடுத்துள்ளது.

கிருமி நாசினி

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பது பழமொழி. என்னதான் “பாஸ்ட் புட்“ கலாசாரத்துக்கு மனிதன் மாறி இருந்தாலும் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் தற்போது மக்கள் பழைய கலாசாரத்துக்கு திரும்பி உள்ளனர். மஞ்சள், வேப்பிலை மருத்துவம் குணம் கொண்டவை என்பதால் அவைகளை மக்கள் கிருமி நாசினியாக தற்போது பயன்படுத்துகின்றனர்.மேலும் தற்போது பழைய சோறுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரிசி சோறு கிடைப்பதே அரிது. கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் தான் உணவு. கூழும் கஞ்சியும் தான் ஆகாரம். அதனை மறந்த இந்த தலைமுறை தற்போது அதன் அருமையை உணர்ந்துள்ளது.

திரும்ப கண்டுள்ளனர்

பழையதை மறக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொன்னது பழைய சோத்தையும் சேர்த்து தான். பழைய சோறு சாப்பிட்டால் என்ன நன்மை என்று இப்ப உள்ளவர்கள் நினைக்கலாம். உடல் சூடு அதிகமாக இருந்தால் அதனை தணிக்கும் மாமருந்து பழைய சோறு தான். பழைய சோற்றில் வைட்டமின்-பி உள்ளது. வடிசாதத்தில் உள்ளதைவிட பழைய சோற்றில் தான் இரும்புச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் வயிற்று புண்ணை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இப்படி பழைய சோற்றின் நன்மைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இத்தனை நன்மைகள் செய்யும் இந்த உணவை அமிர்தம் என்றே சொன்றால் அது மிகையாகாது. இந்த அமிர்தத்தின் பயன்பாட்டை இந்த கொரோனா விடுப்பில் பெற்றோர்களும், குழந்தைகளும் திரும்ப கண்டுள்ளனர். மேலும் உடலுக்கு ஆரோக்கியம் தேவை என்பதற்காக வி.கைகாட்டி உள்ளிட்ட கூற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் கம்மங்கூழ் உள்ளிட்ட பழமையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.

Next Story