நகராட்சி–பேரூராட்சி பகுதிகளில் அமல்: தென்காசி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, தடையை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றும் வகையில் பல்வேறு உத்திகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கொரோனா தொற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, அன்றாடம் அத்தியாவசியமாக தேவைப்படும் மளிகை பொருட்களை வீடு தேடி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகள் மற்றும் நகராட்சி தினசரி காய்கறி சந்தைகளையும் பரவலாக அமைத்தும், அம்மா உணவகம், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் சமூக விலகலை பின்பற்றவும் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு
கொரோனாவை தடுக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் சமூக இடைவெளியை 100 சதவீதம் பொதுமக்கள் கடைபிடிக்கும் பொருட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் கூறுகையில், “தென்காசியில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தடையை மீறி திறக்கும் கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்படும். வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்“ என்றார்.
Related Tags :
Next Story