வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 3 May 2020 4:30 AM IST (Updated: 2 May 2020 11:04 PM IST)
t-max-icont-min-icon

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு மூதாட்டி மட்டும் இறந்து உள்ளார். மற்ற 26 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா பாதித்த யாரும் தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை.

மாவட்டத்தில் 10 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தப்பட்டது. இதில் செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், கேம்பலாபாத் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறியுடன் வரும் நபர்களிடம், சளி, ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்படுகிறது.

கண்காணிப்பு 


தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் குழுக்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதே போன்று எட்டயபுரம், கோவில்பட்டி, வேம்பார், விளாத்திகுளம் பகுதிகளிலும் சோதனை சாவடி அருகே மக்களை தனிமைப்படுத்தி, சளி, ரத்த மாதிரிகள் சேகரிப்பு மற்றும் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முன்அனுமதி பெறாமல் வருபவர்கள் மற்றும் அழைத்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்டுப்பாட்டு அறைகள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூத்துக்குடி பாலிடெக்னிக் மற்றும் வ.உ.சி. கல்லூரியில் சுமார் 200 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் வார்டு தயார் நிலையில் உள்ளது. கிராம பகுதிகளில் முன் அனுமதி பெறாமல் வரும் நபர்களை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல்களை தெரிவிக்கும் வகையில் கிராம அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு மீண்டும் செல்வதற்கு ஏதுவாக 3 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் வாட்ஸ்–அப் எண் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி சீட்டு 


தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 8,700 பேர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி ஆகியவை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்தவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுவரை மாவட்ட அளவில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. நாளை (அதாவது இன்று) முதல் மாநில அளவில் பரிசீலித்து அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தரும் நபர்கள் 100 சதவீதம் சோதனை செய்யப்பட உள்ளனர். பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியில் வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முககவசங்களை அணிந்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story