நெல்லை-தென்காசியில் டிரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - கேமராவில் பதிவானவர்கள் மீது கடும் நடவடிக்கை


நெல்லை-தென்காசியில் டிரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு - கேமராவில் பதிவானவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 May 2020 10:45 PM GMT (Updated: 2 May 2020 7:23 PM GMT)

நெல்லை, தென்காசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கேமராவில் பதிவானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி வருகிற 17-ந் தேதி வரை 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூடாத அளவில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. அரசின் நடவடிக்கை தீவிரமாக உள்ளதால் தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு வந்துள்ளது. மேலும் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் செயல்பட்டு பச்சை மண்டலத்துக்கு செல்வதற்காக அனைத்து அரசு துறைகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

டிரோன் கேமரா

அதன் ஒரு கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தென்காசியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கினர். தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் இருந்து இந்த டிரோன் கேமராவை நேற்று இயக்கினர். இதுபோன்று நகரின் முக்கிய பகுதிகளில் இதனை இயக்கி பொதுமக்கள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர்.

இதன்மூலம் கண்காணிக்கும்போது அரசு விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள், 5 பேருக்கு மேல் கூடி விளையாடுபவர்கள், கூட்டம் போடுபவர்கள் டிரோன் கேமராவில் பதிவானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

நெல்லையிலும் கண்காணிப்பு

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் டிரோன் கேமராவை போலீசார் பறக்கவிட்டு வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வருவோர் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே நகருக்குள் வர அனுமதி அளிக்கப்படுகிறது.

Next Story