கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கை: விரைவில் பச்சை மண்டலமாக வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து வீடு திரும்பியதால், கொரோனா இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. விரைவில் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
சிவகங்கை,
கொரோனா வைரஸ் தொற்றினால் சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து 12 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
அத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையால், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். கடைசியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூரை சேர்ந்த ஒருவரும் நேற்று, குணமானதால் வீடு திரும்பினார். அவரை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ அலுவலர் மீனா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறினாலும் இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மற்ற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
உள்ளாட்சி துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தொடர்ந்து வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி அறிகுறி உள்ளதா? என்று விசாரிப்பார்கள். சிவகங்கை மாவட்டத்தில் சளியால் பாதிக்கப்பட்டவர்களில் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை தொடர்ந்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ மனைகளில் கபசுர குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பினாலும், தொடர்ந்து ஆரஞ்சு வண்ண மண்டலமாக நீடிக்கும் என தெரிகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கை களால் விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாறி, இயல்பு நிலைக்கு சிவகங்கை மாவட்டம் திரும்பும் எனவும் அதிகாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் நம்பிக்கை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story