சேலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 மளிகை கடைகளுக்கு ‘சீல்’
சேலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 மளிகை கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மொத்த மளிகை கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு காலையில் ஏராளமானோர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்று வருகிறார்கள். இதனால் செவ்வாய்பேட்டை பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் மளிகை கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே செவ்வாய்பேட்டையில் மளிகை பொருட்களை வாங்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் ஒருநாள் சாலையின் இடதுபுறம் உள்ள கடைகளும், மறுநாள் வலதுபுறம் உள்ள கடைகளும் மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை செவ்வாய்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததும், அந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்க நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தடை உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை விற்பனை செய்ததாக கூறி சம்பந்தப்பட்ட 3 மளிகை கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.
இதே போல சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுகிறதா? என்று கண்காணித்தனர்.
அப்போது கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 46-வது வார்டில் லைன்மேடு பகுதியில் ஒரு மீன் கடை திறந்து வியாபாரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி அந்த மீன் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த கடைக்குள் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 70 கிலோ பழைய மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story