ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 2 May 2020 9:52 PM GMT (Updated: 2 May 2020 9:52 PM GMT)

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி இந்த மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்குரிய அளவீட்டின்படி அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு 1 கிலோ, பாமாயில் 1 பாக்கெட் ஆகியவை விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டோக்கன் வினியோகம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி நாள் ஒன்றுக்கு 100 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு, பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 2 நாட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் டோக்கன் வினியோகம் செய்தனர். கடலூர் மஞ்சக்குப்பத்தில் வேணுகோபாலபுரம், மிஷன்தெரு, சுதர்சனம்தெரு உள்பட பல்வேறு தெருக்களில் ரேஷன் கடை விற்பனையாளர் அமலநாதன் மற்றும் பணியாளர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர்.

இடைவெளி

இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்பிறகு நாளை (திங்கட்கிழமை) முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள படி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு வந்து விலையில்லா பொருட்களை பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ரேஷன் கடைக்கு வருவோர் 1 மீட்டர் இடைவெளி விட்டு பொருட்களை பெற்றுச்செல்ல வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story