சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் எனக்கூறி வேனில் வந்த 13 பேர் சிக்கினர்
சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் எனக்கூறி வேனில் வந்த 13 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், கொரோனா பரிசோதனைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு கலெக்டர் மூலம் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நத்தம்பட்டி சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக அரசின் முத்திரை மற்றும் பேரிடர் மீட்பு படை முத்திரையோடு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
வேனில் 13 பேர் இருந்தனர். மேலும் விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாபு என்பதும், வேன் அவர்களுடன் வந்த சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சேர்ந்து, சென்னையில் இருந்து 11 பேரை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்று கூறி முறைகேடாக வாகனத்தில் அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து டிரைவர், வேன் உரிமையாளர் உள்பட 13 பேர் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் 13 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அங்கிருந்து முறைகேடாக தென் மாவட்டங்களுக்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story