ஏழைகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்? - மாணிக்கம்தாகூர் எம்.பி. கேள்வி


ஏழைகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்? - மாணிக்கம்தாகூர் எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 3 May 2020 3:56 AM IST (Updated: 3 May 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி உதவி வழங்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க தயங்குவது ஏன் என நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம்தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

விருதுநகர், 

விருதுநகரில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இரண்டு முறை ஊரடங்கை அமல்படுத்துவதை அறிவித்த பிரதமர் மூன்றாவது முறையாக மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அறிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேச வேண்டும் என்பதற்காக இம்முறை அவர் அறிவிப்பை வெளியிடவில்லை. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மத்திய அரசு ஏழை, எளியமக்களுக்கு நிவாரண உதவியாக ஒரு நாளைக்கு ரூ.8 மட்டுமே வழங்கி உள்ளது. தமிழக அரசு ரூ.16 வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் ஆகியோர் ஏழை மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க ரூ.65 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும், மத்திய அரசு இதனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி என்ற தகவல் வெளியான உடனே மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் கோடி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வாய்ப்பு இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்? என தெரியவில்லை. பிரதமரை பொறுத்தமட்டில் வசதி படைத்தவர்களையும், மேட்டுக்குடி மக்களையும் திருப்தி படுத்தினால் போதும் என நினைக்கிறார். ஏழை, எளிய மக்களை பற்றி அவர் கவலை கொள்ள தயாராக இல்லை. கொரோனா பிரச்சினை பற்றி பேச வேண்டிய நேரத்தில் சீனாவில் இருந்து தொழில் முதலீடுகள் இந்தியா வரும் என கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார். 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வருகிற 7-ந்தேதி முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதியில் இத்திட்டத்தின் கீழ் வாழ்வாதாரம் பெற்று வந்த ஏழை, எளிய பெண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் விருதுநகர் பகுதியில் இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முழுஊதியம் வழங்கப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள் திறக்கவும், புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதி அளித்துள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெண்களுக்கு எதிரான குற்றமும், குடும்ப வன்முறையும் குறைந்துள்ள நிலையில் மத்திய அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்துக்குரியது.

சென்னையில் கொரோனா தொற்று மிக அதிகமாகிவிட்ட பின்னர் தான் சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளனர். தாமதிக்கப்பட்ட நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுபவம் மிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்குழுக்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்த வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

விருதுநகர் மாவட்டத்தில் 11 யூனியன்கள் உள்ள நிலையில் 2 யூனியன்களில் மட்டுமே கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மற்ற பகுதிகளில் உள்ள மக்களும் சேர்ந்து சிரமப்பட வேண்டி உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சீரான குடிநீர் வினியோகத்துக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலனில் எதிர்கட்சிகளுக்கும் அக்கறை உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே தமிழக அரசு எதிர்கட்சிகள் கூறும் ஆலோசனைகளை ஏற்று அதன்படியும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முறையாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலை பொறுத்தமட்டில் சமூக இடைவெளியுடன் ஆலைகளை செயல்படுத்த உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் நகர சபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story