கோவையில் சூறாவளிக்காற்றுடன் மழை மரங்கள் சாய்ந்தன


கோவையில் சூறாவளிக்காற்றுடன் மழை மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 3 May 2020 4:03 AM IST (Updated: 3 May 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தன.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்தாலும் மாலையில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கோவையில் நேற்று மாலை 4 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், துடியலூர், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

இந்த மழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசியதால் மழையின் வேகம் குறைந்தது. ஆனால் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

குறிப்பாக வடவள்ளி பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கோவை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கார் மீது மரம் விழுந்தது

அன்னூர் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றில் கரியாம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள 3 மின் கம்பங்கள் வளைந்தன. புளியமரம், வேப்பமரம், இலவமரம் உள்ளிட்ட 8 மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் 2 மரங்கள் மின் வாரிய குடியிருப்பு வீடுகள் மீது விழுந்தன. ஒரு மரம் இளங்கோ என்னும் மின் ஊழியரின் கார் மற்றும் ஸ்கூட்டர் மீது விழுந்து காரை நசுக்கியது.

இத்துடன் துணை மின் நிலையத்தின் பின்புறம் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் குமரன் நகரில் இருந்து மின் கம்பங்கள் காற்றில் வளைந்தன. வேணுகோபால் என்பவரது தோட்டத்தில் 100 வாழை மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து தொங்கின. இதனால் மாலை 4 மணி முதல் பல மணி நேரத்துக்கு மின்சார வினியோகம் தடைபட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த மின்வாரியத்தின் மேட்டுப்பாளையம் உட் கோட்ட செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகர் தலைமையில் ஊழியர்கள் மரங்களை அகற்றி, மின்கம்பிகளை சீரமைத்து மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

Next Story