செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரி உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரி உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 10:45 PM GMT (Updated: 2 May 2020 10:35 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறி வியாபாரி உள்பட 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் காமராஜர் தெருவில் 30 வயது வாலிபர் ஒருவர், மனைவி மற்றும் 2 குழந்தைகள், தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவர், வண்டலூர் ரெயில் நிலையம் அருகில் வெங்கடேசபுரம் செல்லும் சாலையில் காய்கறி கடை வைத்துள்ளார்.

தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து காய்கறி வியாபாரி வீட்டுக்கு அரசு டாக்டர்கள், வருவாய் துறை அதிகாரிகள், ஒட்டேரி போலீசார் சென்று வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவரது வீட்டின் அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை செய்தனர்.

பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அந்த பகுதிக்கு செல்லும் சாலைகளை மூடுவதற்கு அரசு அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவரது காய்கறி கடைக்கு எந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வார்கள் என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, காய்கறி வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு யார்? யார்? காய்கறிகள் வாங்குவதற்காக சென்றார்களோ அவர்கள் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்த காய்கறி கடைக்கு சென்றவர்கள் தங்களை தாங்களாகவே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

70 வயது மூதாட்டி

அதேபோல் கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலையோரமாக காய்கறிகளை விற்கும் தொழில் செய்து வந்தார். 4 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மூதாட்டி குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதேபோல் பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரம், சித்தலாப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 உயர்ந்தது.

Next Story