அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 3 May 2020 5:15 AM IST (Updated: 3 May 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

மும்பை, 

நாட்டிலேயே மராட்டியம் தான் ஆட்கொல்லி கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தநிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

மராட்டியத்தில் மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதம் பேருக்கு மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இது மீதமுள்ள 15 சதவீத மக்களுக்கும் நீட்டிக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக அரசு ஊழியர்கள், வெள்ளை ரேஷன் கார்டுதாரர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க ஜெனரல் இன்சூரன்ஸ் பப்ளிக் செக்டார் அசோஷியேசனுடன் (ஜிப்சா) மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

கொரோனா சிகிச்சை கட்டணம்

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முன்னதாக 496 ஆஸ்பத்திரிகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது 1,000-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை கட்டணங்களை முறைப்படுத்த அனைத்து நோய் சிகிச்சைகளுக்கும் வெவ்வேறு கட்டண தொகுப்புகள் உருவாக்கப்படும். பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயித்து உள்ளது. ஜிப்சாவுடன் தொடர்பு இல்லாத ஆஸ்பத்திரிகளும் தங்களது சிகிச்சை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story