சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யாவிட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் - கர்நாடக அரசுக்கு சித்தராமையா எச்சரிக்கை


சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யாவிட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் - கர்நாடக அரசுக்கு சித்தராமையா எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 May 2020 5:39 AM IST (Updated: 3 May 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யாவிட்டால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று கர்நாடக அரசுக்கு சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை கர்நாடக சிறு-குறு தொழில் நிறுவன சங்க தலைவர் ராஜூ, பீனியா தொழிற்பேட்டை சங்க தலைவர் சீனிவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அந்த சங்கத்தினர், ஊரடங்கு உத்தரவால் சிறு-குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிதி உதவி வழங்க அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கடந்த 40 நாட்களாக சிறு-குறு தொழில் நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வரவில்லை. அந்த சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்க வேண்டும் என்றால் அரசு நிதி உதவி வழங்க வேண்டும். சிறு தொழில்கள் மீது அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

வட்டி தள்ளுபடி

சிறு-குறு தொழில்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நஷ்டத்தில் இருக்கும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்றால், அரசு சில சலுகைகளை வழங்க வேண்டும். இந்த தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன் மீதான வட்டி தள்ளுபடி, கடன் தவணையை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தல், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இந்த சலுகைகளை வழங்கினால் மட்டுமே இந்த சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும். இதன் மூலம் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள். நஷ்டத்தில் இருக்கும் அந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்பட வேண்டுமென்றால் அதற்கு முதலீடு வேண்டும். மேலும் இந்த தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுத்தெருவுக்கு...

இந்த துறைக்கு அரசு உதவிகளை செய்யாவிட்டால், ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும். இதனால் அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள்.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story