சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி: குமரியில் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்


சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி: குமரியில் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 May 2020 6:29 AM IST (Updated: 3 May 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு செல்ல வெளி மாநில தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் தங்கி உள்ள வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், 

சொந்த ஊருக்கு செல்ல வெளி மாநில தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் தங்கி உள்ள வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெளிமாநில தொழிலாளர்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதன் காரணமாக வேலை இழந்த வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், போதுமான உணவு கிடைக்காமலும் பரிதவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கணக்கெடுப்பு பணி

இதேபோல குமரி மாவட்டத்தில் தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக கணக்கெடுப்பு பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நேற்றும் தீவிரமாக நடந்தது. குமரி மாவட்டத்தில் தங்கி உள்ளவர்களில் பெரும்பாலானோர் அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்கைகளுக்குள் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை போலீசார் நேரில் சென்று பார்த்து, நீங்கள் உங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டு வருகிறார்கள். அப்போது விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர்களின் பெயர், விவரம் மற்றும் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரம் ஆகியவற்றை சேகரித்தனர்.

ஆயிரத்துக்கும் அதிகமான...

அந்த வகையில் நாகர்கோவிலில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கணக்கெடுப்பு பணி இன்னும் முடிவடையவில்லை. ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் நேற்று போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்தனர். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அல்லது நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story