ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 3 May 2020 4:30 AM GMT (Updated: 3 May 2020 3:58 AM GMT)

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.

திருச்சி, 

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.

தினமும் 200 பேர்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக மே மாத அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகளிலும் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, மே மாத அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டோக்கன் வினியோகம்

அதன்படி, எந்தெந்த கிழமைகளில் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் பொருட் கள் வாங்க வரவேண்டும் என்பதற்காக நேற்று முதல் திருச்சியில் வீடுதோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் கடைகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இதர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரப்படியும் செயல்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பந்தேகானா தெரு, பூலோகநாத சுவாமி கோவில் பகுதியில் உள்ள 4 ரேஷன்கடைகளில் மொத்தம் 3,500 கார்டுதாரர்கள் உள்ளனர். பந்தேகான கடை விற்பனையாளர் பாபு நேற்று ஒரேநாளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகம் செய்ததாக தெரிவித்தார். இதுபோல இதர ரேஷன்கடை பணியாளர்களும் டோக்கன் வினியோகம் செய்தனர். வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கும் பணி இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைபிடித்து தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story