பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்பாய்கள் தேக்கம் உணவுக்கு வழியில்லாமல் தொழிலாளர்கள் திண்டாட்டம்


பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்பாய்கள் தேக்கம் உணவுக்கு வழியில்லாமல் தொழிலாளர்கள் திண்டாட்டம்
x
தினத்தந்தி 3 May 2020 4:20 AM GMT (Updated: 2020-05-03T09:50:44+05:30)

அகரம்சேரி பகுதியில் ஊரடங்கால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்பாய்கள் தேங்கி கிடக்கிறது. பாய் தயாரிக்கும் தொழிலாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அணைக்கட்டு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி, மேல்ஆலத்தூர், வெட்டுவாணம், பொன்னேரி, வாணியம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் குடிசைத்தொழிலாக கோரைப்பாய் உற்பத்தி அதிகளவில் இருந்து வருகிறது. கோரைப்பாய் தயாரிக்க மூலப்பொருட்களான கோரை, நாடா, நூல், சாயம் ஆகியவை கரூர், சேலம், பரமத்தி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வந்து பாய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தப் பணியில் பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோரைப்பாய் தொழிலை குடிசைத்தொழிலாக அறிவிக்க வேண்டும், என வேலூர் முன்னாள் தி.மு.க. எம்.பி. ப.சண்முகம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து, அதை நடை முறைக்குக் கொண்டு வந்தார்.

தேங்கி கிடக்கும் பாய்கள்

கொரோனா ஊரடங்கால் அகரம்சேரி மற்றும் மேல்ஆலத்தூர், வெட்டுவாணம், கொல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் பாய் தயாரிக்கும் பணி கடந்த 35 நாட்களாக முடங்கி உள்ளது. பாய் தயாரிப்புப் பணியில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாய் உற்பத்தி செய்யும் உரிமையாளர்களில் ஒருவரான முருகேசன் என்பவரிடம் கேட்டதற்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தயாரித்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாய்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால் பாய் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாய் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய லாரிகள் இயக்கப்படாததால் 35 நாட்களாகப் பாய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம்

பாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கேட்டதற்கு, நாங்கள் 50 ஆண்டுகளாக பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு, எங்களுக்கு அதற்கான கூலியாக ரூ.200-ல் இருந்து ரூ.300 வரை கிடைக்கும். அதை, பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தோம்.

ஊரடங்கால் 35 நாட்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். நாங்கள் வேலை செய்யும் இடத்தில் முன்பணம் கேட்டால், தயாரித்த பாய்கள் அனைத்தும் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது, பணம் கொடுக்க எங்கு போவது? எனக் கூறுகிறார்கள். இப்படி கூறும்போது நாங்கள் என்ன செய்வது?

ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட அகரம்சேரி, கொல்லமங்கலம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட மேல்ஆலத்தூர், கூடநகரம் ஆகிய பகுதிகளில் பாய் நெசவு கூலித்தொழிலாளர்களுக்கு இதுவரை தொண்டு நிறுவனங்களோ, அரசியல்வாதிகளோ யாரும் கொரோனா நிவாரணப் பொருட்கள் ஏதும் வழங்கவில்லை.

நகைகளை அடகு வைத்தாவது...

அரசு வழங்கிய ரூ.1000 மற்றும் 20 கிலோ அரிசி எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதை, வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்து வருகிறோம். கையில் இருக்கும் தங்க நகைகளை கடையில் அடகு வைத்தாவது ஊரடங்கு முடியும் வரை ஒருவேளையாவது வயிறார சாப்பிடலாம் என்றால், அடகுக்கடையும் மூடப்பட்டுள்ளது என மன வருத்தத்துடன் கூறினார்கள்.

Next Story