ஊரடங்கு காரணமாக கிலோ ரூ.10-க்கு விற்றும் விலைபோகாத தர்பூசணி பழங்கள் வியாபாரிகள் வேதனை


ஊரடங்கு காரணமாக கிலோ ரூ.10-க்கு விற்றும் விலைபோகாத தர்பூசணி பழங்கள் வியாபாரிகள் வேதனை
x
தினத்தந்தி 3 May 2020 9:59 AM IST (Updated: 3 May 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக கிலோ ரூ.10-க்கு விற்றும் தர்பூசணி பழங்கள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடப்பதாக வேலூர் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வேலூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சாலைகள் இயங்காததால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ரெயில், பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வீட்டை விட்டு வெளியே சென்று வருகின்றனர்.

தர்பூசணி பழங்கள்

கொரோனாவினால் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் உற்பத்தி, விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை போக்குவரத்து இல்லாததால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதைத்தொடர்ந்து தமிழக அரசு விவசாய பொருட்களை ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வாகனங்களில் எடுத்து செல்ல தடையில்லை என்று அறிவித்தது. மேலும் மாவட்ட அளவில் இதனை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்தது.

அதன்காரணமாக தற்போது விவசாய பொருட்கள் தங்கு தடையின்றி எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேன்கள் மூலம் தர்பூசணி பழங்கள் வேலூருக்கு கொண்டு வரப்பட்டது. அவை விற்பனை ஆகாமல் வேலூரின் முக்கிய சாலையோரம் குவிந்து கிடக்கின்றன.

ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை

இதுகுறித்து வேலூர் தர்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:- கோடைக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் மற்ற இடங்களை வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்படும். அதனால் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றின் விற்பனை அதிகமாக காணப்படும். மேலும் வெள்ளிக்காய், தர்பூசணி பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள். எனவே கோடைக்காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிற மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்களை வரவழைத்து விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தர்பூசணி பழங்களை வாங்கி விற்பனைக்காக வைத்துள்ளோம். ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் தர்பூசணி பழங்கள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கிறது. கடந்தாண்டு தர்பூசணி பழங்கள் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்தும், அதனை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.

கோடைக்காலத்தில் வேலூர் நகரம் முழுவதும் தள்ளுவண்டிகளில் தர்பூசணி, பப்பாளி, முலாம் பழங்களை வெட்டி வைத்து விற்பனை செய்வார்கள். தற்போது தள்ளுவண்டி கடைகள் வைப்பதற்கு தற்போது அனுமதி இல்லை. அதனால் தர்பூசணி பழங்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் காய்கறி, பழங்கள் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story