ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று: வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணிப்பு


ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று: வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 4:58 AM GMT (Updated: 2020-05-03T10:28:14+05:30)

ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணித்தனர்.

கரூர்,

ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வீடு, வீடாக சென்று மருத்துவ குழுவினர் கண்காணித்தனர்.

135 பேருக்கு கொரோனா பரிசோதனை

கரூர் அருகே உள்ள கடம்பங்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட சின்னவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 25 வயது ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அக்கிராமத்தை சுற்றி உள்ள அண்ணா நகர், நன்னியூர், என்.புதூர், சிந்தாயூர், வாங்கல், பசுபதிபாளையம், கடம்பன்குறிச்சி, தளவாப்பாளையம், அக்ரஹாரம்,பால்வார்பட்டி,சிவியான்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 136 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். மேலும் சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களையும் கவனித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் என்பதால், அவர் பணியாற்றிய வெள்ளியணையில் அவர் தங்கிய அறை மற்றும் அவருடன் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் நடமாடியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதுடன் பணியில் இருந்தபோது, அவர் அழைத்து சென்ற நோயாளிகள் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

300 பேர் சுகாதார பணியில்...

சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாங்கல் வட்டார டாக்டர் சுகமதி, டாக்டர்கள் ஆனந்த், கோபிநாத் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 40 மருத்துவ குழுவினர் மற்றும் 50 மேற்பார்வையாளர்கள் உள்பட 300 பேர் சுகாதாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்கேனும் காய்ச்சல், சளி உள்ளதா என கண்காணிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 139 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 89 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை. மீதம் உள்ளவர்களுக்கு சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட வாலிபரின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏதும் இல்லை எனவும் கூறினார்.

Next Story