ஊரடங்கு எதிரொலி: கரூரில் ஜவுளி-கொசுவலைகள் உற்பத்தி கடும் பாதிப்பு கேள்விக்குறியான 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
ஊரடங்கால், கரூரில் ஜவுளி-கொசுவலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கரூர்,
ஊரடங்கால், கரூரில் ஜவுளி-கொசுவலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஜவுளி உற்பத்தி
வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு தனிஇடம் உண்டு. இங்கிருந்து உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களான திரைச்சீலைகள், மேஜை விரிப்பான்கள், தலையணை உறைகள், கால் மிதியடிகள், அலங்கார குஷன்கள், கையுறை ஆகியவை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஜவுளி உற்பத்தியில் கரூரில் மட்டும் 400 ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
இதேபோல் கொசுவலை உற்பத்தியிலும் கரூர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கரூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொசுவலை நூல் மற்றும் கொசுவலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகள் மேற்கு வங்காளம், மராட்டியம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொசுவலைகள் தேக்கம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி தடைபட்டதால், கரூரில், ஜவுளி உற்பத்தி மற்றும் கொசுவலை தயாரிப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ஜவுளி-கொசுவலைகளை விற்பனைக்கு அனுப்ப முடியும். இதனால் அவை அனைத்தும் அந்தந்த நிறுவனங்களில் தேங்கி கிடக்கின்றன. மேலும் இந்த நிறுவனங்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கால், அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் ஜவுளி-கொசுவலை நிறுனங்களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களும் வேலையில்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ஊரடங்கால் கோடிக்கணக்கில் முதலீடு முடங்கிபோய் விட்டது என உற்பத்தியாளர்களும் கவலை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story