அன்னவாசல், கீரனூர், கந்தர்வகோட்டையில் சாராயம் காய்ச்சி, விற்ற 13 பேர் கைது


அன்னவாசல், கீரனூர், கந்தர்வகோட்டையில் சாராயம் காய்ச்சி, விற்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2020 10:56 AM IST (Updated: 3 May 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல், கீரனூர், கந்தர்வகோட்டையில் சாராயம் காய்ச்சி, விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல், 

அன்னவாசல், கீரனூர், கந்தர்வகோட்டையில் சாராயம் காய்ச்சி, விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் பகுதியில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புல்வயல் உடையான்குளம் அருகே சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஊறலை அழித்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேல சித்தக்குடிப்பட்டி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமார் என்பவர் வீட்டு கழிவறை அருகே சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஊறலை அழித்த போலீசார் குமாரை (33) கைது செய்தனர்.

இதேபோல் கீழக்குறிச்சி வலங்கைமான் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட சரவணபெருமாள் (30) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

9 பேர் கைது

கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் மற்றும் போலீசார் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீரனூர் குன்றாண்டார்கோவில் செல்லும் ரெயில்வே கேட் அருகில் ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் (29), சக்திவேல் (22) ஆகிய இருவரும் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் சாராயம் விற்று கொண்டிருந்ததாக 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல் களமாவூரை சேர்ந்த சுப்பையா (70), சித்தப்படியை சேர்ந்த மூர்த்தி (59), நமணராயசத்திரத்தை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேரும் சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆலங்காப்பட்டி, சுடுகாட்டு பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அஜித்குமார் (20), பஞ்சநாதன் (23), ஆனந்தகுமார் (21), ஆனந்தன் (24) ஆகிய 4 பேரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் கைது செய்தார்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் தைல மரக்காட்டில் சாராயம் விற்பனை செய்வதற்காக போடப்பட்டிருந்த சாராய ஊறலை அழித்து வாசு (60) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் கல்லுப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் 75 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் விவசாய தோட்டத்தில் போடப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story