டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்


டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2020 11:00 PM GMT (Updated: 3 May 2020 8:53 PM GMT)

டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வை திரும்பபெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல், 

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்து 40 நாட்கள் ஆகிறது. இந்த நோய் தொற்று காரணமாக உலக நாடுகள் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்து உள்ளன. இதனால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றது.

இதையொட்டி டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை ரூ.2.50 தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது லாரி உரிமையாளர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இதை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு மதிப்புகூட்டு வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த 40 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல் விலையை குறைக்காததாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவின்படி அனைத்து லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாலும் லாரி மற்றும் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3.25-ம், டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50-ம் மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு அறிவித்து உள்ள பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும். குறைக்காவிட்டால் லாரிகளை இயக்க முடியாது. லாரிகளை இயக்காவிட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். நடுத்தர, ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பெட்ரோல் ,டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று அதில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story