சேலத்தில் தடை உத்தரவை மீறிய 4 இறைச்சி கடைகள், வீட்டுக்கு ‘சீல்’


சேலத்தில் தடை உத்தரவை மீறிய 4 இறைச்சி கடைகள், வீட்டுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 3 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-04T02:44:31+05:30)

சேலத்தில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த 4 இறைச்சி கடைகள் மற்றும் ஒரு வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேநேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பல கடைகளில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவியது.

மேலும் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சி வியாபாரம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சேலம் மாநகர பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் தடை உத்தரவை மீறி மாநகர பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுகிறதா? என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி 4 மண்டலங்களிலும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சூரமங்கலம் மண்டலத்தில் 2-வது வார்டு சின்னம்மா பாளையம் மெயின் ரோடு பகுதியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 12-வது வார்டு மணக்காடு பகுதியிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் 10-வது வார்டு வீராணம் மெயின் ரோடு மற்றும் 42-வது வார்டு நாராயணன் நகர் பகுதி என 4 இடங்களில் தடை உத்தரவை மீறி இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 இறைச்சி கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் நாராயண நகர் பகுதியில் ஒரு வீட்டிலும் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்ததால் அந்த வீட்டையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மொத்தம் 5 இடங்களில் சுமார் 70 கிலோ அளவிலான இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்த நபரிடம் இருந்து ரூ.27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story