திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி, கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த 29 வயதான கர்ப்பிணிக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பூந்தமல்லி நகராட்சி சார்பில் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, கர்ப்பிணியின் கணவர் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கர்ப்பிணியான அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தார். இதனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருவேற்காடு சுந்தர விநாயகர் நகரைச் சேர்ந்த 39 வயதான ஏ.சி. மெக்கானிக், கடந்த 2 நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.
அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் ஏ.சி. எந்திரங்களை சரி செய்யும் பணிக்கு சென்று வந்ததாக கூறினார். திருவேற்காடு நகராட்சி சுகாதார அதிகாரிகள் அந்த பகுதி முழுவதையும் தனிமைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆனது. இவர்களில் 45 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story