மேல்மலையனூர் அருகே கிணற்றில் தள்ளி விவசாயி கொலை தலைமை ஆசிரியர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


மேல்மலையனூர் அருகே கிணற்றில் தள்ளி விவசாயி கொலை தலைமை ஆசிரியர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 May 2020 10:11 PM GMT (Updated: 3 May 2020 10:11 PM GMT)

மேல்மலையனூர் அருகே விவசாயி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வரங்கன் (வயது 80), விவசாயி. இவருக்கு முத்துராமன்(57), ஆனந்தராமன்(54) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆனந்தராமனுக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் தண்ணீர் குழாயை நேற்று முன்தினம் மாலை முத்துராமன், இவரது மகன் ஜெயக்குமார்(27) ஆகியோர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அறிந்த செல்வரங்கன், அவர்கள் 2 பேரையும் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமன், செல்வரங்கனை கொலை செய்யும்படி தனது மகன் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

கிணற்றில் தள்ளி கொலை

இதற்கிடையே அதே பகுதியில் உள்ள தனது விளைநிலத்துக்கு செல்வரங்கன் சென்றுள்ளார். உடனே ஜெயக்குமாரும், அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தாத்தா என்றும் பாராமல் செல்வரங்கனை தாக்கி, விளைநிலத்தில் இருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி செல்வரங்கன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியர்

ஆனால் கிணற்றில் 70 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, செல்வரங்கன் உடலை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அவலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் செல்வரங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமார், முத்துராமன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். முத்துராமன், ஆரணி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story