தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது


தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 3 May 2020 10:24 PM GMT (Updated: 2020-05-04T03:54:03+05:30)

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக நாடு முழுவதும் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மத்திய அரசு சார்பில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியில் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தஞ்சை மாநகரில் 21 இடங்களில் காய்கறி கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கப்படுகின்றன. இருப்பினும் ஊரடங்கின்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

3 வண்ண அனுமதி அட்டை

இந்த நிலையில் மக்கள் நடமாட்டத்தை மேலும் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் பச்சை, நீலம் மற்றும் ரோஸ் ஆகிய 3 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இது கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி அட்டை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் மட்டும் அனுமதிக் கப்படுகிறது.

முழு ஊரடங்கு

ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிப்பதில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை எந்தவித அனுமதியும் வழங்கப்படாத நிலையில் கடந்த 2 வாரங்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சாலைகள் வெறிச்சோடியது

இந்த முழு ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமே காணப்படவில்லை. வாகனங்களும் இயக்கப்படாததால் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

லாரிகள் நிறுத்தி வைப்பு

நேற்றைய முழு ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மட்டும் இயங்கின. வழக்கமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் கூட நேற்று முழு ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல செயல்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மருந்துக்கடைகளும், வாகனங்கள் இயக்கப்படாததால் பெட்ரோல் பங்க்குகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 3 வண்ண அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிப்பதில்லை.

இதனால் ஞாயிற்றுக்கிழமை எந்தவித அனுமதி வழங்கப்படாத நிலையில் சென்ற வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்தார்.

மக்கள் நடமாட்டம் இல்லை

அதன்படி ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மளிகை, ஓட்டல், காய்கறி, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, இதனை மீறுபவர்கள் மீது போலீசார் மூலம் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். முழு ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார்குடி-நீடாமங்கலம்

இதேபோல் மன்னார்குடியில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் மன்னார்குடி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலத்தில் மேலராஜவீதி கடைத்தெரு, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே நிலைய சாலை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story