கோவை ஆஸ்பத்திரி மீது மலர் தூவ ராணுவ ஹெலிகாப்டர் வரவில்லை


கோவை ஆஸ்பத்திரி மீது மலர் தூவ ராணுவ ஹெலிகாப்டர் வரவில்லை
x
தினத்தந்தி 4 May 2020 4:06 AM IST (Updated: 4 May 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மீது மலர் தூவ ராணுவ ஹெலிகாப்டர் வரவில்லை. இதனால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை என்றும், எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம் என்றும் டாக்டர்கள், நர்சுகள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

கோவை,

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்த்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத் முதல் அசாம் வரையும் விமானப்படை போர் விமானங்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று விண்ணில் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மீதும் சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் மாலை 5.45 மணி முதல் மலர் தூவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தகவல்கள் வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது.

ஏமாற்றமில்லை

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்றிருந்தனர். ஆனால் 5.45 மணி ஆன பின்னரும் மலர் தூவ ஹெலிகாப்டர்கள் எதுவும் வரவில்லை. மருத்துவ பணியாளர்கள் மாலை 6 மணி வரை நின்றிருந்தனர். ஆனால் ஹெலிகாப்டர் எதுவும் வராததால் அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்குள் சென்று தங்களது பணியை தொடர்ந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கொரோனாவை எதிர்த்து போராடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும் என்று கூறினார்கள். ஆனால் ஹெலிகாப்டர் எதுவும் வரவில்லை. இதற்காக நாங்கள் எதுவும் வருத்தப்படவில்லை. எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.

இவ்வாறு அவர்கள் உருக்கத்துடன் கூறினார்கள்.

தகவல் அனுப்பவில்லை

இதுகுறித்து சென்னையில் உள்ள விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மீது சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் மலர்களை தூவும் நிகழ்ச்சி எதுவும் திட்டமிடப்படவில்லை. இதுதொடர்பாக நாங்கள் ஒருநாள் முன்னதாகவே தெரிவித்து விட்டோம். அப்படி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மீது மலர் தூவும் நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி விமானப்படை நிர்வாகத்திடமிருந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு கடிதம் அல்லது இ-மெயில் மூலம் முன்கூட்டியே தெரிவித்து இருப்போம். ஆனால் அதுபோல எந்த தகவலும் விமானப்படை தரப்பில் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு அனுப்பப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story