சென்னை அசோக் நகரில் ஒரே வீட்டில் 9 பேருக்கு கொரோனா


சென்னை அசோக் நகரில் ஒரே வீட்டில் 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2020 10:45 PM GMT (Updated: 3 May 2020 10:45 PM GMT)

சென்னை அசோக் நகரில் ஒரே வீட்டில் 9 பேர் உள்பட மொத்தம் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா தாக்கம் ‘கிடுகிடு’ என அதிகரித்து வருகிறது. 

ஒரு பக்கம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பொது மக்கள் சென்னை தெருக்களில் அலைமோதுகின்றனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 7 பேர் குழந்தைகள். மேலும் 37 பேருக்கு முதன்மை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்ட 1,458 பேருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் நேற்று ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த தெருவில் இதுவரை 40 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை புளியந்தோப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மேலும் 17 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதைப்போல் சென்னை அசோக் நகர் 11-வது தெருவில் ஒரே வீட்டில் 9 பேர் உள்பட 22 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனுமந்தபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கும், புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், கொருக்குப்பேட்டை பகுதியில் 12 பேருக்கும், மேற்கு மாம்பலம் அயனாவரம் சூளை உள்ளிட்ட பகுதிகளில் சிலருக்கும் நேற்று கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story