தஞ்சையில் குடிநீர், தூய்மை பணியாளர்கள் 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்


தஞ்சையில் குடிநீர், தூய்மை பணியாளர்கள் 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 May 2020 10:58 PM GMT (Updated: 3 May 2020 10:58 PM GMT)

தஞ்சையில் குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் 750 பேருக்கு மருத்துவபரிசோதனையை கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் 750 பேருக்கு மருத்துவபரிசோதனையை கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் உள்ள 14 கோட்டங்களில் 620 தூய்மை பணியாளர்களும், பொறியியல் பணி குடிநீர் பிரிவின் கீழ் 130 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு 45 நாட்களுக்கு முன்பிருந்தே இப்பணியாளர்கள் சுகாதார பணி, குடிநீர் வழங்கும் பணி, கிருமிநாசினி தெளிக்கும் பணி ஆகிய பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் காலணி, கையுறை, முக கவசம், கைகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு மற்றும் கிருமிநாசினி, காலை மற்றும் நண்பகல் உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், செயற்பொறியாளர் ராஜகுமாரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

30 அறைகளில் பரிசோதனை

முகாமில் இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் 40 டாக்டர்களும், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 200 பேர் கலந்துகொண்டு 30 தனிஅறைகளில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

உடல்எடை, வெப்பநிலை, ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, டாக்டர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நோய்த்தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு டாக்டர்களால் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தடுப்பூசி

மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், தடுப்பூசி, 200 மில்லி லிட்டர் நோய் எதிர்ப்பு சக்தி பானம், பிஸ்கட் பாக்கெட், வாழைப்பழம், கடலை மிட்டாய், சாத்துக்குடி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, இந்திய மருத்துவ கழக தஞ்சை கிளைதலைவர் டாக்டர் மாரிமுத்து, டாக்டர்கள் சிங்காரவேல், இளங்கோவன், தாசில்தார் வெங்கடேசன், தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சவரிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story