திருவாரூர், நாகை மாவட்டங்களில் 146 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு சென்னையில் இருந்து வந்தவர்கள்


திருவாரூர், நாகை மாவட்டங்களில் 146 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு சென்னையில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 4 May 2020 4:49 AM IST (Updated: 4 May 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், நாகை மாவட்டங்களில் 146 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர், 

திருவாரூர், நாகை மாவட்டங்களில் 146 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அங்கு வேலை பார்க்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்கிறார்கள். இவ்வாறு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சிலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து வருபவர்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சோதனை சாவடிகள்

கண்காணிப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக வடுவூர், கோவில்வெண்ணி, கொட்டையூர், அத்திக்கடை, கீரனூர் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை சாவடிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசாருடன் இணைந்து சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்துக்கு இதுவரை 199 பேர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து வந்த 63 பேர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு இல்லை

இதில் 52 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் தானாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மன்னார்குடியில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடி வழியாக வேதாரண்யம் நோக்கி சென்ற காரை நிறுத்தி பயண ஆவணம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். காரை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காரில் பயணித்தவர்கள் உரிய பயணஆவணம் மற்றும் உரிய அனுமதி வைத்திருந்ததால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்துக்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 83 பேர் சென்னையில் இருந்து வந்தது போலீசாரின் கண்காணிப்பு பணியில் தெரியவந்தது. இந்த 83 பேரில் 41 பேர் நாகை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் 712 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எத்தனை மாதங்களாக நாகை மாவட்டத்தில் தங்கி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சமீபத்தில் வந்தவர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

கீழ்வேளூர்

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட நபர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லையான கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story