மதுரையில் புதிதாக தேர்வான ஆண், பெண் போலீசார் பணியில் சேர்ந்தனர்; கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
மதுரையில் புதிதாக தேர்வான ஆண், பெண் போலீசார் நேற்று பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
மதுரை,
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு சிறப்பு மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு உள்ளிட்ட பல கட்ட தேர்வுகள் நடந்தன. அதில் தமிழ்நாடு முழுவதும் 8,538 சிறப்பு மற்றும் ஆயுதப்படை போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணி காரணமாக அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் சேர அரசு உத்தரவிட்டது.
அதன்படி தேர்வு பெற்ற போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் பணி நேற்று அந்தந்த மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர், மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 528 சிறப்பு காவல்படையை சேர்ந்த ஆண் போலீசார் மற்றும் ஆயுதப்படைக்கு தேர்வான 88 பெண் போலீசாருக்கான 15 நாள் பயிற்சி மதுரையில் நேற்று தொடங்கியது.
பெண் போலீசாருக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும், 262 ஆண் சிறப்பு காவல் படையினருக்கு மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளியிலும், மேலும் 266 சிறப்பு காவல் படையைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை மாநகர 6-வது பட்டாலியனிலும் பயிற்சி நடைபெறு கிறது.
இதையொட்டி தேர்வானவர்கள் பணியில் சேர்வதற்காக அதிகாலையில் இருந்தே தங்களது உடைமைகளுடன் மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் போதிய இடைவெளியுடன் நிறுத்தப்பட்டனர்.
முதலில் அவர்களுக்கு ஒருவர்பின் ஒருவராக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர்கள் பயிற்சி முடிந்த பின்னர் டி.ஜி.பி.யின் உத்தரவின்படி அந்தந்த மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிகிறது.
Related Tags :
Next Story