கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு


கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 3 May 2020 11:57 PM GMT (Updated: 2020-05-04T05:27:46+05:30)

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால், 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், தனி கடைகள் இன்று(திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை புதுவை அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

கடைகள் திறப்பு

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை, கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள் திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில்

சுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள், சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி உள்ளிட்டோர் பணியாற்றலாம்.

கடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை, ஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி கடை ஆகியவை இயங்கும். சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்கலாம்.

அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Next Story