வாகன போக்குவரத்திற்காக பெங்களூரு உள்பட 5 மாவட்டங்கள் ஒரே பகுதியாக கருதப்படும் - தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவு


வாகன போக்குவரத்திற்காக பெங்களூரு உள்பட 5 மாவட்டங்கள் ஒரே பகுதியாக கருதப்படும் - தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2020 5:39 AM IST (Updated: 4 May 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

வாகன போக்குவரத்திற்காக பெங்களூரு உள்பட 5 மாவட்டங்கள் ஒரே பகுதியாக கருதப்படும் என்று தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கர்நாடகத்தில் பசுமை, ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. சிவப்பு மண்டலத்திலும் சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் சிவப்பு மண்டலத்தில் பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், மைசூரு ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஆரஞ்சு மண்டலத்தில் பெலகாவி, விஜயாப்புரா, கலபுரகி, பாகல்கோட்டை, மண்டியா, பல்லாரி, தார்வார், தட்சிண கன்னடா, பீதர், சிக்பள்ளாப்பூர், கதக், உத்தர கன்னடா மற்றும் துமகூரு ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.

பசுமை மண்டலத்தில் தாவணகெரே, உடுப்பி, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, ஹாசன், ஹாவேரி, குடகு, கோலார், கொப்பல், ராய்ச்சூர், சிவமொக்கா, ராமநகர், யாதகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

அடையாள அட்டை

வாகன போக்குவரத்திற்காக பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், ராமநகர், சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய 5 மாவட்டங்கள் ஒரே பகுதியாக கருதப்படும். இந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பகுதிகளுக்குள் சென்று வரலாம். ஆனால் பணியாற்றும் நிறுவனத்தின் கடிதம் அல்லது அடையாள அட்டையை காட்ட வேண்டும். இதற்கென்று தனி பாஸ் தேவை இல்லை.

பிற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்காக செல்பவர்கள் மாவட்ட கலெக்டர் அல்லது துணை போலீஸ் கமிஷனரிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். அனுமதிக்கப்படாத பணிகளுக்காக செல்பவர்கள் ஒரு முறை மட்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுதிக்கப்படுவார்கள்.

இரவு 7 மணிக்கு மேல் காலை 7 மணி வரை அத்தியாவசிய சேவைகள் வழங்குபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த சேவையில் ஈடுபடுவோருக்கு ஏற்கனவே பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிந்துரை செய்வார்கள்

தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஊரடங்கு நேரத்தில் பயணிக்க பாஸ் பெற வேண்டும். அவர்களுக்கு பாஸ் வழங்க சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் துணை போலீஸ் கமிஷனர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story